2024-10-01 · NutriFreaks
ஒருவரது உடலில் எவ்வளவு தசை (muscle) இருக்கிறதோ அவர் அவ்வளவு வலிமையானவராகவும், ஆரோக்கியமானவராகவும் உள்ளார் என்று கூறலாம். ஒருவரது உடலில் கொழுப்பு நிறைய இருப்பினும் அது வலிமையுடன் சம்மந்தப்பட்டது அல்ல.
தசைக்கான மூலப் பொருளாக உள்ள புரதம் ஒரு சராசரி மனித உடலுக்கு ஒருவரது எடைக்கு ஏற்ப தேவைப்படுகிறது. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் 0.8 கிராம் (0.8 gram per kg) அளவிற்குத் தேவை. உதாரணத்திற்கு, 60 கிலோ எடை கொண்ட ஒருவரது உணவில் தினசரி குறைந்தபட்சம் 48 கிராம் புரதம் இடம்பெற வேண்டும். உடலில் அன்றாடம் நடக்கும் வழக்கமான பணிகளுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் (metabolism) இந்த அளவு புரதம் இன்றியமையாதது.
புரதத்துடன் சேர்ந்து, மாவுச்சத்து (carbohydrate) மற்றும் கொழுப்பு (fat) ஆகிய மூன்றும் பேரூட்டச்சத்துகள் (macronutrients) ஆகும். இவை மூன்றுமே உடல் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலையும் (energy) வழங்குகின்றன. ஆற்றலை கலோரி (calorie) என்ற அலகு மூலம் மதிப்பிடுகிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் அவரது எடை, உயரம் மற்றும் உடல் செயல்பாட்டின் அளவிற்கு ஏற்ப தினமும் ஆற்றல் செலவாகிறது.
நாம் உட்கொள்ளும் ஒரு கிராம் புரதமோ, மாவுச்சத்தோ 4 கலோரி ஆற்றல் தரும். ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி ஆற்றல் தரும். ஒரு நாளைக்கு ஒரு நபரின் உடல் இயக்கத்திற்கு தேவையான புரதத்தை விட (0.8 கிராம்/கி.கி) அதிகமாக ஒருவர் புரதம் உட்கொண்டு, ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளையும் பூர்த்தி செய்துவிட்டார் எனில், அவரது உடலிலுள்ள தசையின் அளவு அதிகரிக்கும். ஆனால், இதற்கு அவர் கடும் உடல் உழைப்பை அல்லது பழுவை (weight) வைத்து செய்யப்படும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தசை பெருக்கத்தின் காரணமாக உடல் எடை அதிகரித்தல் (உடல் கொழுப்பின் மூலம் போடும் எடை போலல்லாமல்) உடலுக்கு உறுதியை ஏற்படுத்தும்; உடல் நலத்தை மேம்படுத்தும்.
உடற்பயிற்சிக் கூடங்களில் (gym) வலுபயிற்சி (strengh training) எனப்படும் உடற்பயிற்சி செய்வோருக்கு, மேலே சொன்ன 0.8 கிராம் அளவை விட கூடுதலாக, கிலோவிற்கு 2 கிராம் அல்லது அதை விட அதிகமாக புரதம் அன்றாட உணவில் தேவை.
இவர்கள் தவிர, கடும் உழைப்பில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கும் சராசரி (0.8 கிராம்) அளவைவிட அதிக புரதம் தேவை.
சரி, நாம் நமது அன்றாட உணவில் நமக்குத் தேவையான புரதத்தை எடுத்துக் கொள்கிறோமா? தொடர்ந்து பார்க்கலாம்.
