NutriFreaks

3. தினமும் நாம் தேவையான அளவு புரதத்தை உட்கொள்கிறோமா?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

நமது தினசரி உணவு பழக்கத்தில் புரதத்தின் அளவு நமது அன்றாடத் தேவையை விட பெரும்பாலும் சற்று குறைவாகவே உள்ளது. புரதம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்மை இதற்கு முக்கிய காரணமாகும்.  ஒரு சராசரி இந்திய வயது வந்தவருக்குப் பரிந்துரைக்கப்படும் புரதத்தின் அளவு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 முதல் 1 கிராம், இருப்பினும், சராசரி உட்கொள்ளல் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.6 கிராம் ஆகும். 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 73 சதவிகித இந்தியர்களுக்கு புரதச்சத்து குறைபாடு உள்ளது, 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு புரதத்தின் தினசரி தேவை பற்றி தெரியாது.

உதாரணமாக, 65 கிலோ எடை உள்ள ஒருவர் காலையில் நான்கு இட்லிகளும், 200 ml சாம்பாரும், மதிய வேளையில், 400 ml சாதம், காய்கறிகள், 150 ml பயறு குழம்பும், இரவு, 3 சப்பாத்திகள், குருமாவும் சாப்பிடுகிறார் என்றும், காலையும் மாலையும் மொத்தம் 150 ml பால் கலந்த இரண்டு டம்ளர் காபி/தேநீர் அருந்துகிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

இதில் உள்ள புரதத்தின் அளவு பின்வருமாறு:

இட்லி (4) – 6.4 கி சாம்பார் (200 ml) – 5.6 கி சாதம் (400 ml) – 7.3 கி பயறு குழம்பு (150 ml)- 6 கி காய்கறிகள் – 1 கி சப்பாத்தி (3) – 9 கி குருமா – 3 கி பால் (150 ml) – 5 கி

மொத்தம் 43.3 கிராம்

ஆனால், அவருடைய குறைந்தபட்ச அன்றாடத் தேவை 52-65 கிராம் ஆகும்.

மேற்கண்ட உணவுடன், அவர் புரதச்சத்து குறைவாக உள்ள தின்பண்டங்களும் சாப்பிடுகிறார் எனில், அவர் தனக்கு அன்றாடத் தேவையான அளவு கலோரிகளைப் பெற்றுவிடுகிறார். ஏனெனில், மேற்கண்ட உணவில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. இதே உணவை அவர் அளவு கூடுதலாக சாப்பிட்டால் அவரது உடல் கொழுப்பு அதிகரிக்கும்.

புரதச் சத்து அதிக அளவு கொண்ட ஒரு சரிவிகித உணவு முறையால் மட்டுமே இந்த பற்றாக்குறையைப் போக்க முடியும். இதை எப்படி செய்யலாம் என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

← Back to blogs