NutriFreaks

6. மாவுச்சத்து என்பது என்ன? எந்தெந்த உணவுகளில் உள்ளது?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

உடலுக்குத் தேவையான மூன்று பிரதானமான ஊட்டச்சத்துகள் ‘பேரூட்டச்சத்துக்கள்’ (macronutrients) என்று அழைக்கப்படுகின்றன. அவை புரதம் (protein), மாவுச்சத்து (carbohydrate) மற்றும் கொழுப்பு (fat) ஆகியவை ஆகும். இவற்றில் புரதம் குறித்து நாம் முந்தைய பதிவுகளில் விரிவாகக் கண்டோம். இனி, மாவுச்சத்து குறித்து கவனம் செலுத்துவோம்.

மாவுச்சத்து என்பது என்ன? எந்தெந்த உணவுகளில் உள்ளது?

மாவுச்சத்து என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூலக்கூறுகளை உள்ளடக்கிய வேதிப்பொருள் ஆகும். மாவுச்சத்து நமது உணவு மண்டலத்தில் செறிக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸாக கலந்து, உடல் உறுப்புகளுக்குச் சென்று, உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாறுகிறது. நமது உணவில் மாவுச்சத்து மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன. அவை, சர்க்கரைகள் (sugars), ஸ்டார்ச் (starch) மற்றும் நார்ச்சத்து (fiber).

சர்க்கரைகள் (sugars):

குளுக்கோஸ் (glucose), fructose, galactose, சுக்ரோஸ் (sucrose), lactose போன்ற மூலக்கூறுகளை சர்க்கரைகள் என்கிறோம். பழங்கள், பால் பொருட்கள், தேன் மற்றும் கேரட், பீட்ரூட் போன்ற சில காய்கறிகள் ஆகியவற்றில் சர்க்கரைகள் உள்ளன. உணவுப் பொருட்களில் நாம் சேர்த்துக் கொள்ளும் வெள்ளை சீனி அல்லது சர்க்கரையானது sucrose என்ற சர்க்கரையின் தூய்மைப்படுத்தப்பட்ட (refined) வடிவம் ஆகும்.

ஸ்டார்ச் (starch):

குளுக்கோஸ் மூலக்கூறுகள் நீளமாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் அமைப்பை நாம் ஸ்டார்ச் என்கிறோம். இது தானியங்கள், பயறு வகைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கின்றது.

நார்ச்சத்து (fiber):

காய்கறிகள், கீரைகள், பயறு வகைகள், தானியங்கள், கொட்டைகள் (nuts) மற்றும் விதைகள் (seeds) ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து முழுமையாக நமது மனித உணவு மண்டலத்தில் செறிக்கப்படாது. ஆகவே அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் குறைவு தான். ஆனால், நார்ச்சத்து நமது உடலில் மிகவும் இன்றியமையாத பாத்திரத்தை ஆற்றுகிறது. அதைப் பற்றி பின்னர் விரிவாகக் காணலாம்.

மாவுச்சத்து குறித்த அடிப்படை விவரங்களை இந்தப் பதிவில் பார்த்தோம். மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றா, ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு மாவுச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும் போன்றவற்றைப் புரிந்து கொள்வதற்கு, முதலில் மாவுச்சத்து நமது உணவு மண்டலத்தில் எவ்வாறு செறிக்கப்படுகிறது, பின்னர் அது என்னவாகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

← Back to blogs