2024-10-01 · NutriFreaks
மாவுச்சத்து உடலுக்கு ஆற்றல் வழங்கும் பிரதான ஊட்டச்சத்து ஆகும். நாம் உட்கொள்ளும் 1 கிராம் மாவுச்சத்து 4 கலோரி ஆற்றலை உடம்பிற்கு தருகிறது. நம் உள் உறுப்புகளின் இயக்கம், நமது கை கால்களின் இயக்கம், நமது அத்தனை செயல்பாடுகள், பேச்சு, நமது மூளையின் செயல்பாடு என அனைத்திற்கும் ஆற்றல் தேவை. இதற்கு மாவுச்சத்து பிரதானமாக பயன்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவிலுள்ள மாவுச்சத்து எப்படி ஆற்றலாகிறது என்ற செயல்முறையைப் பார்க்கலாம். முதலில், நாம் சாப்பிடும் உணவு செரிமான மண்டலத்திற்குள் நுழைகிறது. நமது வாய் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பாகும். அங்கு உணவு உடைக்கப்படுகிறது. பின்னர், நமது இரைப்பைக்கு வந்து சேர்கிறது. அங்கு சில என்சைம்கள், அமிலங்கள் அதன் மீது வினையாற்றுகிறது. பிறகு, சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும் செல்கிறது. அங்கும் சில வினைகள் நடக்கின்றன. இந்த செயல் முறைப் போக்கில் சர்க்கரைகள் மற்றும் ஸ்டார்ச் ஆகிய மாவுச்சத்துக்கள் உடைக்கப்பட்டு, குளுக்கோஸ் மூலக்கூறுகளாக மாறுகின்றன. குடலிலுள்ள சில தனிச்சிறப்பான செல்களால் அந்த குளுக்கோஸ் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
இரத்த ஓட்டத்தில் கலந்த குளுக்கோஸ் உடலின் அனைத்து செல்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தானாக செல்கள் குளுக்கோஸை பெற முடியாது. இங்குதான் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோனின் பாத்திரம் துவங்கிறது. மாவுச்சத்து உடலுக்குள் வந்து குளுக்கோஸாக மாறும் செயல்போக்கில், இன்சுலினும் சுரந்து, இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை உடலிலுள்ள செல்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், இன்சுலின் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இன்சுலினின் அனுமதியைப் பெற்று, செல்கள் குளுக்கோஸை உள்வாங்கி, அதனை ஆற்றலாக மாற்றுகின்றன.
இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸ் உடனடியாக ஆற்றலாக ஆக வேண்டுமானால், நமது உடல் ஏதாவது செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், ஒரு மனிதர் அந்த நேரத்தில் ஓய்வில் இருக்கிறார் எனில், உடலானது குளுக்கோஸை பிற்பாடு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கும். சேமித்து வைக்கும் பொருட்டு, குளுக்கோஸை இறுக்கமாகக் கட்டி, க்ளைக்கோஜன் (glycogen) என்ற பொருட்களாக மாற்றுகிறது. இந்த க்ளைக்கோஜன் உடலின் தசைகளிலும், கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகிறது. அந்த நபர் மீண்டும் செயல்படும்போது, இந்த க்ளைக்கோஜன் சேமிப்பிலிருந்து குளுக்கோஸ் பெறப்பட்டு அது ஆற்றலாக மாறுகிறது.
இதுவரை ஒரு கட்டம். ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் இந்த முறையில் குளுக்கோஸை சேமிக்க முடியும். ஒருவேளை, தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்க முடிந்த அளவைவிட அதிகமான குளுக்கோஸ் கிடைக்கிறது எனில், இரண்டாவது கட்டம் துவங்கிறது. இப்போது, இன்சுலின் அந்த பயன்படுத்தபடாத, மிச்சமான குளுக்கோஸை கொழுப்பாக மாற்றி அதை தோலுக்குக் கீழே சேமித்து வைக்கிறது. இந்தக் கொழுப்பை பிறகு எப்போது வேண்டுமானாலும் குளுக்கோஸாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே இந்த செயல்முறையில் உடல் ஈடுபடுகிறது.
ஆதிகாலத்தில், எப்போதாவது மட்டுமே உணவு கிடைக்கும் என்ற நிலையில், கொழுப்பு இவ்வாறு சேமிக்கப்படுவது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாக இருந்தது. ஆனால், உணவு அபரிமிதமாகக் கிடைக்கும் நவீன காலத்தில், இந்த செயல்பாடு, தலைகீழாக, அதாவது உயிருக்குக் கேடாக எப்படி ஆகிவிட்டது என்று அடுத்த பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.
