2024-10-01 · NutriFreaks
உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுதான் மாவுச்சத்தின் பிரதான பணி என்று முந்தைய பதிவில் பார்த்தோம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு எவ்வளவு ஆற்றல் தேவை? அந்தத் தேவைக்கு அதிகமான மாவுச்சத்து உணவை உட்கொள்ளும் போது என்ன நடக்கும்?
ஒரு நபரின் உடல் உயரம் மற்றும் எடைக்கு ஏற்ப ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி ஆற்றல் தேவை என்பது மாறுபடும். இதற்கு அடிப்படை வளர்சிதைமாற்ற விகிதம் (Basal Metabolic Rate – BMR) என்று பெயர். BMR-ஐ கணக்கிடும் போது, ஒருவருடைய பாலினம் மற்றும் வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 35 வயதுடைய 170 செ.மீ. உயரம் மற்றும் 70 கி.கிராம் எடையுடைய ஒரு ஆணின் BMR ஒரு நாளைக்கு 1593 கலோரி ஆகும். அதாவது, அந்த நபர் எந்த வேலையும் செய்யாமல், இயங்காமல் இருந்தாலும், அவர் 1593 கலோரி ஆற்றலை செலவிடுவார். அவருடைய மற்ற தினசரி வேலைகளுக்கு 400 கலோரி ஆகிறது என வைத்துக்கொண்டால் அவருக்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ 2000 கலோரி ஆற்றல் தேவை.
இந்த 2000 கலோரிகளுக்கு மேல் அவர் சாப்பிட்டால் அந்த உணவு, நாம் முந்தைய பதிவில் கண்டது போல க்ளைக்கோஜனாக மாறும். ஆனால், மனித உடலால் மொத்தம் 500 முதல் 600 கிராம் க்ளைக்கோஜனை மட்டும்தான் சேமிக்க முடியும். அவர் தினசரி 2000 கலோரிகளுக்கு மேல் உணவு எடுத்துக்கொண்டால், க்ளைக்கோஜன் சேமிப்பையும் தாண்டி உடலுக்கு க்ளுக்கோஸ் கிடைக்கும். இது உடனடியாக எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கொழுப்பாக மாற்றப்படும். நமது தோலுக்குக் கீழே உள்ள கொழுப்புத் திசுக்களில் (Adipose Tissues) இந்தக் கொழுப்பு முதல் கட்டமாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் கொழுப்பினால் (Subcutaneous Fat) உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால், இந்தப் பகுதியில் எவ்வளவு கொழுப்பைச் சேமிக்கமுடியும் என்பது வரையறுக்கப்பட்டது. அதையும் தாண்டி கொழுப்பு சேரும்போது, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கணையம் போன்ற உடலின் மிக மிக முக்கியமான உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்புத் திசுக்களில் கொழுப்பு சேமிக்கப்பட ஆரம்பிக்கும். இந்த வகைக் கொழுப்பு (Visceral Fat) மிகவும் ஆபத்தானது. இதையும்விட ஆபத்தான ஒன்று என்னவென்றால், இரத்த நாளங்களுக்கு உள்ளேயும் கொழுப்பு படிய ஆரம்பிக்கும். இந்த இரண்டு பிரச்சனைகளும்தான், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு அடிப்படைக் காரணம்.
கூடுலாகக் கிடைக்கும் உணவைக் கொழுப்பாக மாற்றுவது பரிணாம வளர்ச்சி உருவாக்கிய ஒரு அறிவியல் அற்புதம். ஆனால், மனித சமூகத்தில், உணவு உற்பத்தித் துறையில் கடந்த 70-80 ஆண்டுகளில் நடந்த புரட்சிகரமான மாற்றம், உடம்பில் அதிக கொழுப்பு சேருவதன் பின்விளைவுகளைக் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் கண்டுபிடிப்பு மனிதனுடைய உடல் உழைப்பைக் குறைத்து, தினசரி கலோரி தேவையை வெகுவாகக் குறைத்துள்ளது. ஆதலால், குறைந்த உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களான (Lifestyle Diseases) சர்க்கரை நோய், இருதய நோய்கள், கல்லீரல் பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்கள் அனைத்திற்கும் முதல் படி உடல் பருமன் (obesity) ஆகும். அதிலும் குறிப்பாக, நமது உள்ளுறுப்புகளைச் சுற்றி படிந்துள்ள கொழுப்பு ஆகும்.
மாவுச்சத்து அதிகமாக உள்ள உணவை நாம் அளவாக உண்ணுவதன் மூலம், உடல் பருமன் ஆகாமல் தவிர்த்து, இந்த நோய்கள் அண்டாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே உடல் பருமன் உள்ளவர்கள் சரியான உணவுமுறையைப் (diet) பின்பற்றியும், உடற்பயிற்சி மற்றும் விரத முறைகளைப் பின்பற்றியும் உடல் பருமனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
மாவுச்சத்து உணவுகள் என்று பொதுவாக நாம் இப்போதுவரை பேசினாலும், எல்லா மாவுச்சத்து உணவுகளுக்கும் இது அப்படியே பொருந்தாது. அவற்றில் வகைப்பாடுகள் உண்டு. உதாரணமாக, நார்ச்சந்து என்ற மாவுச்சத்து வகை உடலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். மேலும், மாவுச்சத்து உடலுக்கு ஆற்றல் தருகிறது என்பது மட்டுமின்றி, அதற்கு வேறு சில பயன்பாடுகளும் உண்டு. இது குறித்து அடுத்த பதிவில் காணலாம்.
