NutriFreaks

9. நார்ச்சத்து ஏன் ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும்?

Tamil blogs

2024-10-01 · NutriFreaks

மாவுச்சத்து தேவைக்கு அதிகமாக உட்கொள்வதின் அபாயத்தை கடந்த பதிவில் பார்த்தோம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் ஆரோக்கியத்தை சீர்ப்படுத்த முயல்பவர்கள், மாவுச்சத்து குறைவாக உட்கொள்ளும் LCHF, கீட்டோ, பேலியோ போன்ற டயட்டுகளை எடுப்பதுண்டு. இந்த டயட்டுகளில் கூட மாவுச்சத்தின் ஒரு குறிப்பிட்ட வகையான நார்ச்சத்து (Fiber) கண்டிப்பாக இடம்பெறும்.

நார்ச்சத்து (Fiber)

பயறு வகைகள், தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது. மனித உடலுக்கு நார்ச்சத்து ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். ஆனால், நமக்கு அது பயன்படும் விதம் வித்தியாசமானது. நார்ச்சத்தை செரிக்கச் செய்வதற்குத் தேவையான என்சைம்கள் மனித உடலில் இல்லை. அதனால், மற்ற மாவுச்சத்து போல அது நமது உணவு மண்டலத்தில் செரிக்கப்படுவது இல்லை. மாறாக, அது இரைப்பை மற்றும் சிறு குடலைத் தாண்டி நேராகப் பெருங்குடலுக்குச் செல்கிறது.

கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble Fiber) என்ற நார்ச்சத்தின் ஒரு பகுதி மட்டும் பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, ஒருவகை கொழுப்பு அமிலங்களாக (Short-Chained Fatty Acids) மாறி உடலுக்கு மிகச் சிறிதளவு ஆற்றல் தருகிறது. மற்ற பெரும்பான்மையான நார்ச்சத்து கழிவாக வெளியேறி விடுகிறது. ஆனால், மனித மலத்திற்கு ஒரு நிறை, திரட்சி மற்றும் மிருதுவான தன்மையை அளிப்பதே இந்த நார்ச்சத்து தான். மேலும், அது பெருங்குடலில் ஜெல் போன்ற ஒரு திரவத்தை உருவாக்குகிறது. மனிதக் கழிவு பெருங்குடலில் எளிமையாக நகர்வதற்கும், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கவும் இந்த நார்ச்சத்து தான் இன்றியமையாததாக உள்ளது.

குடல் பாக்டீரியாக்களும், நார்ச்சத்தும்

நமது குடலில் நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிறைய உண்டு. நமது உடலில் உள்ள மொத்த செல்களின் அளவை விட நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகம் என்ற உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது. இந்த பாக்டீரியாக்கள் உடல் நலம் மற்றும் மன நலத்துடன் பெரிதளவு சம்மந்தப்பட்டுள்ளன. நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்கப்பட்டு, உறிஞ்சப்படுவதில் குடல் பாக்டீரியாக்களின் பங்கு இன்றியமையாதது. இந்த குடல் பாக்டீரியாக்களின் உணவே நார்ச்சத்து தான். நாம் உட்கொள்ளும் உணவில் நார்ச்சத்து இல்லை என்றால், குடல் பாக்டீரியாக்கள் வெகுவாக அழிய நேரிடும். இது பலவிதமான உடல் மற்றும் மனப் பிரச்சனைகளை உருவாக்கும். குடல் பாக்டீரியாக்கள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

ஆகவே, கழிவு அகற்றம் மற்றும் குடல் பாக்டீரியாக்களின் உணவாக இருத்தல் போன்ற முக்கியப் பாத்திரங்களை ஆற்றும் நார்ச்சத்தை நாம் சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்தை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பயறு வகைகள், பழங்கள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது எனினும், காய்கறிகள் அதிகம் உண்ணுவதன் மூலம் தினசரி நார்ச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதே மிகச்சிறந்த வழி ஆகும். ஏனெனில், தானியங்கள், பழங்கள், பயறு வகைகளில் நார்ச்சத்து மட்டுமின்றி சர்க்கரை உள்ளிட்ட இதர மாவுச் சத்து பொருட்களும் அதிகமாக உள்ளன. அவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொண்டு, காய்கறிகளை மூன்று வேளை உணவிலும் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் தினசரி நார்ச்சத்து அளவை நாம் ஈடுகட்டி விடலாம்.

நார்ச்சத்து என்ற மாவுச்சத்து தவிர்த்து, இதர மாவுச்சத்து உணவுகளால் நமக்கு என்ன பயன் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

← Back to blogs